தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த நிதித் துறை, கட்டமைப்பு மற்றும் நலத் திட்டத் துறைகளுடன் பிரதமர் திரு மோடி விரிவான கலந்தாய்வு நடத்தினார்.
நிதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், விவசாயிகளுக்கு ஆதரவான செயல்பாடுகளுக்குத் தேவையான உத்திகள் பற்றியும், கடன் வசதிகள் அளிப்பது குறித்தும் பிரதமர் விரிவாக விவாதித்தார். கோவிட்-19 தொற்று தாக்குதல் சூழ்நிலையில் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும், தொழில் துறையினர் விரைவில் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் விவாதித்தார்.
தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்களின் நலன்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், கோவிட்-19 நோய்த் தாக்குதலால் தடைபட்டிருக்கும் தொழில் நடவடிக்கைகள் மீள்வதற்கு உதவி செய்வதன் மூலம், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் பற்றிக் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை பலப்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும், கார்ப்பரேட் நிர்வாகம், கடன் வாய்ப்புகள், கட்டமைப்புத் துறைகளில் புதிய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் பிரதமர் பேசினார்.
புதிய கட்டமைப்புத் திட்டங்களில் பணிகளைத் தொடங்க விரைவாக நடவடிக்கை எடுப்பது, இழந்துவிட்ட நாட்களில் நடைபெற்றிருக்க வேண்டிய பணிகளை ஈடுகட்டும் வகையில் கட்டமைப்புப் பணிகளை வேகப்படுத்துவதற்கான அவசியம் பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேசிய கட்டமைப்பு வழிமுறையின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் திட்டங்களை அடிக்கடி உயர்நிலை அளவில் ஆய்வு செய்து, கால தாமதங்களைத் தவிர்த்து, புதிய வேலைகளை உருவாக்கிட வேண்டும் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.
பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்த முன்முயற்சிகள் தடையின்றி தொடர வேண்டும் என்றும், முதலீடுகள் வரத்து மற்றும் முதலீடு குறித்த தகவல்கள் அளிப்பதில் தடைகளை, கால வரம்புக்கு உட்பட்டு நீக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், நிதி அமைச்சகத்தின் செயலாளர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.